ECONOMYMEDIA STATEMENTPBT

இரண்டே நாட்களில் 3,800 சுற்றுலா பற்றுச் சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், அக் 24- சிலாங்கூர் சுற்றுலா பற்றுச்சீட்டுத் திட்டம் 2.0 கீழ் இரண்டே நாட்களில் 3,800 பற்றுச்சீட்டுகளை பொதுமக்கள் தட்டிச் சென்றனர்.

இந்த பற்றுச்சீட்டுகளை ஷோப்பி  பொருள் விற்பனை செயலி வாயிலாக விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் தொடங்கியது.

இத்திட்டத்திற்கு பொது மக்கள் வழங்கும் ஆதரவு பிரமிக்கத்தக்க வகையில் உள்ளதாக டூரிசம் சிலாங்கூர் எனப்படும் மாநில சுற்றுலா மேம்பாட்டு அமைப்பின் தலைமை செயல்முறை அதிகாரி அஸ்ருள் ஷா முகமது கூறினார்.

தலா 100 வெள்ளி மதிப்பிலான இந்த பற்றுச்சீட்டுகளை பெறுவதற்கான வாய்ப்பு இவ்வாண்டு இறுதி வரை வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த பற்றுச் சீட்டுத் திட்டத்திற்கு பொதுமக்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தது போல் தோன்றுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிலாங்கூரில் சுற்றுலாத்துறை சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு இந்நடவடிக்கை பெரிதும் துணை புரியும் என நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டுவதற்காக மாநில அரசு 10,000 சுற்றுலா பற்றுச் சீட்டுகளை விநியோகம் செய்து வருகிறது. இந்த பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி 35 சுற்றுலா நிறுவனங்கள் வழங்கக்கூடிய 170 க்கும் மேற்பட்ட சுற்றுலா திட்டங்களில் பங்கேற்க முடியும்.

மொத்தம் 25 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை உள்ளடக்கிய இந்த சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் அறிவிக்கப்பட்டது. 


Pengarang :