ECONOMYHEADERADNATIONAL

நாளை முதல் பருவ மழையை எதிர்கொள்ளத் தயாராவீர்- பொதுமக்களுக்கு  அறிவுறுத்து

ஷா ஆலம், நவ 2- நாளை நவம்பர் 3 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாடு மோசமான வானிலையை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றுடன் கூடிய கனத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என சுற்றுச் சூழல் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

வடகிழக்கு பருவக் காற்று தொடர்ந்து வீசும் காரணத்தால் காற்றின் வேகம் அதிகரித்து தென் சீனக் கடல் பகுதியில் பேரலைகள் ஏற்படுவதற்கும்  கடல் கொந்தளிப்பாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் சொன்னார்.

இந்த இயற்கை சீற்றம் காரணமாக கடலோரப் பகுதிகளில் ஆபத்து அதிகம் உள்ளதாக கூறிய அவர், பல இடங்களில் கடல் நீர் கரையை கடக்கும் அபாயமும் உள்ளது என்றார்.

தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. இத்தகைய சூழலில் கடல் பெருக்கும் ஒன்று சேர்ந்தால் நிலைமை இன்னும் விபரீதமாகும் என்றார் அவர்.

 


Pengarang :