ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர், பி.எம்.சி.சி   வட்டமேசை மாநாடு – முதலீட்டை அதிகரிக்க வாய்ப்பு

 பெட்டாலிங் ஜெயா,  நவ 9-  பிரிட்டிஷ் மலேசியன் வர்த்தக சபையுடன் (பி.எம்.சி.சி.) நேற்று நடத்தப்பட்ட வட்டமேசை மாநாடு அனைத்துலக அளவில் முதலீட்டுத் துறையை மேம்படுத்த சிலாங்கூருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சித் திட்டத்திற்கு ஏற்ப  மாநில அரசு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான தளமாகவும் இந்தத் திட்டம் உள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கூறினார்.

இந்த திட்டம் இரு தரப்பினருக்கும் ஒரு பயனுள்ள பங்காளித்துவத்தை உருவாக்கும் என்பதோடு  ஆக்ககரமான கலந்துரையாடலுக்கும் வழி வகுக்கும் என்று அவர் சொன்னார்.  இந்த ஒத்துழைப்பு எதிர்காலத்தில் தொடர வேண்டும், ஏனெனில் இது மாநிலத்தில் முதலீடு செய்வதற்குரிய வாய்ப்பினை  முதலீட்டாளர்களுக்கு  வழங்குகிறது என்று இங்குள்ள ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்ற  இந்த வட்டமேசை மாநாட்டில் உரையாற்றிய போது அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த நிகழ்வில்  பி எம் சி.சி. தலைவர் அப்ரார் ஏ அன்வார், முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் மற்றும் இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட்  தலைமை செயல் முறை அதிகாரி ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாட்டின் 19வது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் சிலாங்கூரில் நீண்ட காலமாக ஒரு முக்கிய முதலீட்டாளராகவும் இங்கிலாந்து விளங்கி வருவதாக அமிருடின் கூறினார். கடந்த 2011 முதல் கடந்த ஆண்டு வரை நாட்டின் முதலீடு மாநிலத்தில் 45 கோடி வெள்ளியைத் தாண்டியது. இதனால் உற்பத்தித் துறையில் 2,100 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆசிய சந்தையில் ஊடுருவுவதற்கான நுழைவாயிலாக மட்டுமின்றி உற்பத்தி மற்றும் முதலீட்டுத் துறையின் தேர்வுக்கான இடமாகவும் சிலாங்கூர் உள்ளதை இது நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.


Pengarang :