ECONOMYMEDIA STATEMENTPBT

வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைந்து மேற்கொள்ள 4 கோடி வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 11– சிலாங்கூரில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள 50 இடங்களில் உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 4 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆறுகள் மற்றும் குளங்களை ஆழப்படுத்துவது, தடுப்பணைகளை தரம் உயர்த்துவது  மற்றும் நிர்மாணிப்பது, நீர் அழுத்தப் பம்ப்களை பொருத்துவது மற்றும் ஆற்று ரிசர்வ் நிலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ள  2 கோடியே 57 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

ஸ்ரீ கெம்பாங்கனில் உள்ள புளுவாட்டர் நீர் சேகரிப்பு குள நிர்மாணிப்புக்கு 40 லட்சம் வெள்ளியும் தாமான் முத்தியாரா புக்கிட் ராஜா அருகே கிராண்ட் ஷப்பாடு நெடுஞ்சாலையில் நீர் சேகரிப்பு குளம் அமைக்க 10 லட்சம் வெள்ளியும் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பொருட் சேதங்களைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கையாக இத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

வெள்ளம் அடிக்கடி ஏற்படக்கூடிய பகுதிகளாக ஷா ஆலம் செக்சன் 13, கிள்ளான் தாமான் மேரு டாயா, சிப்பாங், கம்போங் சாலாக் திங்கி, கம்போங் கிஞ்சாங்  மற்றும் செலாயாங் பாரு ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறுகிய நேரத்தில் 65 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்வது மற்றும் அதிகமான நீரை உடனடியாக வெளியேற்றும் ஆற்றல் வடிகால்களுக்கு இல்லாதது போன்றவை திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமாக விளங்குகிறது என்றார் அவர்.

 


Pengarang :