ECONOMYMEDIA STATEMENTPBT

வாகனமில்லா தினத்தை முன்னிட்டு வெப்பக் காற்று பலூனில் பயணிக்க வாய்ப்பு- எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாடு

ஷா ஆலம், நவ 16– கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமில்லா தினம் ஷா ஆலம் மாநகரில் நேற்று முன்தினம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

இந்த வாகனமில்லா தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் வெப்பக் காற்று பலூனில் பறந்தவாறு மாநகரின் அழகை வானிலிருந்து இரசிப்பதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

இதுவொரு புதிய சுற்றுலா ஈர்ப்புத் திட்டமாக விளங்குவதாகக் கூறிய அவர், அடுத்து வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.

இது தவிர்த்து ஓட்டப்பந்தயம், சைக்கிளோட்டம், ஜூம்பா, புதிர்ப் போட்டி, அதிர்ஷ்டக் குலுக்கு, சிறார்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி ஆகிவையும் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வளர்ப்பு பிராணிகளை நேசிப்பவர்களுக்காக பிராணிகள் காட்சிசாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தோடு வருகையாளர்களுக்கு இலவசமாக பயன்படுத்தப்பட்ட பொருள்கள் வழங்கப்பட்டன என்றார் அவ்ர.

இங்குள்ள செக்சன் 14 மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வருகையாளர்கள் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

கடந்த ஆண்டுகளில் 5,000 பேர் வரை இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொண்ட வேளையில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இம்முறை 600 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :