ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

2022  பட்ஜெட்டில் பொருளதார மீட்சி, கல்விக்கு முன்னுரிமை- மந்திரி புசார்

ஷா ஆலம்நவ 18-   இம்மாதம் 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் சிலாங்கூர் அரசின் #Selangor2022 வரவு செலவுத் திட்டம் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்சியில் கவனம் செலுத்தும்.

கடந்த 2020 ஆண்டிலும் இவ்வாண்டிலும் இழந்த வருமானத்தை ஈடு செய்வதற்காக பொருளாதாரத் துறைகளுக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த ஈராண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வதற்கு ஏதுவாக பொருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்துவற்கான செயல்முறைகளை நாங்கள் தயார் செய்யவுள்ளோம் என்றார் அவர்.

அதே சமயம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் பெருந்தொற்று நெருக்கடிகளை சமாளிப்பதற்காக சிலாங்கூர் அரசு எடுத்துள்ள சில தயார் நிலை வியூகங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

2022 ஆம்  ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றத் தகவலையும் மந்திரி புசார் வெளியிட்டார்.

கல்வித் துறை மாநில அரசின் முழு அதிகாரத்திற்குட்பட்டதாக இல்லாவிட்டாலும் இளம் தலைமுறையினரின் எதிர்காலம் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால் கல்வித் துறைக்கு மாநில அரசு முக்கியத்துவம்  அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி தாக்கல் செய்யும் இந்த வரவு செலவுத் திட்டம் டிவி சிலாங்கூர் ( selangortv.my ) மற்றும்  மீடியா சிலாங்கூர் முகநூல் ( www.facebook.com / MediaSelangor ) மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான முக்கிய செய்தித் தொகுப்பு சிலாங்கூர் கினி ( selangorkini.my), மாண்டரின் ( selangorkini.my/zh-hans/ ),  தமிழ் ( selangorkini.my/ta/ )  மற்றும் ஆங்கிலப் பதிப்பை Selangorjournal.my என்ற இணைப்பின் மூலமும்  தெரிந்து கொள்ளலாம்  என்றார்.

 


Pengarang :