ECONOMYMEDIA STATEMENTSELANGOR

2022 வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்கு கூடுதல் அனுகூலங்கள்- கணபதிராவ் பெருமிதம்

ஷா ஆலம், நவ 27- சிலாங்கூர் மாநில அரசின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்கு  நன்மை தரும் பல திட்டங்கள் அமல்படுத்தப் பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

இந்திய சமூகத்திற்கான பிரத்தியேக திட்டங்களுக்காக சுமார் 99 லட்சம் வெள்ளியும் பொதுவான திட்டங்களின் கீழ் வழங்கப்படும் தீபாவளி ஜோம் ஷோப்பிங் திட்டத்திற்கு 20 லட்சம் வெள்ளியும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதன் வழி சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் வெள்ளி இந்திய சமூகத்திற்கு கிடைப்பதற்குரிய வாய்ப்பு கிட்டுள்ளது என்று அவர் சொன்னார்.,

தமிழ்ப்பள்ளிகளுக்கான 50 லட்சம் வெள்ளி வருடாந்திர மானியம் இவ்வாண்டும் தொடரப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் தமிழ், சீன மற்றும் சமயப் பள்ளிகளுக்கு இவ்வாண்டிற்கான மானியம் வழங்கும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த நிதி வழங்கும் நிகழ்வு வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள வேளையில் அடுத்தாண்டிற்கு மேலும் 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுகிறது என்று கணபதிராவ் தெரிவித்தார்.

இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 63 லட்சம் வெள்ளி அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அத்தொகையில் 18 லட்சம் வெள்ளி இந்து ஆலயகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவித்தார்.

இது தவிர, ஐ-சீட் எனப்படும் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகாவுக்கான நிதி ஒதுக்கீடு அடுத்தாண்டிலும் தொடரப்பட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்தாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் 254 பேர் பயனடைந்த வேளையில் அடுத்தாண்டில் இத்திட்டத்திற்கு 11 லட்சத்து 46 ஆயிரம்ம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். இந்திய தொழில்முனைவோருக்கு வர்த்தக உபகரணங்களை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய சமூகம் எதிர்நோக்கும் அடையாளப் பத்திரங்கள் தொடர்பான பிரச்சனைகளைக் கையாள்வதற்காக தம்மால் ஆரம்பிக்கப்பட்ட மைசெல் திட்டம் தொடரப்படுவதோடு அதில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கான சம்பளம் உள்ளட்ட தேவைளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கணபதிராவ் சொன்னார்.

மக்களுக்கு பயன்தரக்கூடிய சிறப்பான வரவு செலவுத் திட்டத்தை அறிவித்ததன் வழி நாட்டின் முன்னுதாரண மாநிலம் என்ற பெருமையை சிலாங்கூர் பெறுகிறது. சிறப்பான வரவு செலவுத் திட்டத்தை குறிப்பாக இந்திய சமூகத்தின் தேவைகளை உணர்ந்து உரிய ஒதுக்கீடுகளை வழஙகிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசின் மானியங்கள் யாவும் மக்களுக்கு முறையாக சென்று சேர்வதை உறுதி செய்வதே தனது தலையாய கடமையாகும் என்றும் அவர் அவர் தெரிவித்தார்.


Pengarang :