ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

1,200 சிறு, குறு வணிகர்கள் செல்டேக் திட்டத்தில் இணைந்தனர்

ஷா ஆலம், நவ 30- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 1,200 சிறு மற்றும் குறு வணிகர்கள் செல்டேக் எனப்படும் சிலாங்கூர் இலக்கவியல் மின்-விநியோகத் ஒருங்கமைப்புத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இந்த வர்த்தகத் தளம் 800க்கும் மேற்பட்ட பொருள்களை உள்ளடக்கியுள்ளதோடு மாத வர்த்தகம் 65,000 வெள்ளி முதல் 100,000 வெள்ளி வரை உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பெருநாள் காலங்களில் இந்த வர்த்தகம் 40 விழுக்காடு வரை அதிகரிப்பைக் காண்கிறது. கடந்தாண்டு ஜூலை மாதம் நோன்பு பெருநாளின் போது கோழி, இறைச்சி போன்ற சமையல் பொருள்களுக்கான தேவை அதிகரித்த காரணத்தால் செல்டேக் வர்த்தகம் 140,000 வெள்ளியை எட்டியது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று புக்கிட் காசிங் உறுப்பினர் ஆர். ராஜீவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். செல்டேக் தளத்தைப் பயன்படுத்தி  வர்த்தகம் புரிவோரின் எண்ணிக்கை குறித்து ராஜீவ் கேள்வியெழுப்பியிருந்தார்.

பி.கே.என்.எஸ்.எனப்படும் சிலாங்கூர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் செயல்படும்  சிலாங்கூர் இண்டஸ்ட்ரியல் கார்ப்ரேஷன் நிறுவனத்தால் நடத்தப்படும் இந்த செல்டேக் தளம் சுமார் 26 லட்சம் வெள்ளி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என மந்திரி புசார் குறிப்பிட்டார்.

 


Pengarang :