ECONOMYHEALTHNATIONALPBT

நாளை தொடங்கி 157,000 இலவச ஊக்கத் தடுப்பூசிகளை சிலாங்கூர் வழங்குகிறது

ஷா ஆலம், டிச 7- “செல்வேக்ஸ் சிலாங்கூர் பூஸ்டர்“ திட்டத்தின் கீழ் 157,000 தடுப்பூசிகளை மாநில அரசு இலவசமாக விநியோகிக்கவுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் செல்கேர் கிளினிக்குகளில் இந்த தடுப்பூசிகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த தடுப்பூசி சேவையை வழங்கும் செல்கேர் கிளினிக்குகள் தொடர்பான பட்டியலை செலங்கா செயலி வாயிலாகவும் https://selcareclinic.com/our-clinic/ என்ற அகப்பத்தின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் மூலம் ஊக்கத் தடுப்பூசி பெறுவோர் பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட கிளினிக்குகள் மைசெஜாத்ரா செயலிக்கு அனுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இத்திட்டம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், இதன் தொடர்பான முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

இந்த சினோவேக் ஊக்கத் தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் ஏற்கனவே செல்வேக்ஸ் திட்டத்தில் பங்கு கொண்டவர்களுக்கு மட்டுமின்றி கூட்டரசு அரசின் திட்டங்கள் வாயிலாக தடுப்பூசி பெற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதர வகை தடுப்பூசிகளை பெற்றவர்கள் சினோவேக் தடுப்பூசியைப் பெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனினும், ஒரே வகை தடுப்பூசியை ஊக்கத் தடுப்பூசியாக பெறும்படி  அவர்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்கப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :