ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

அரசாங்க ரிசர்வ் நிலங்களில் குறுகிய காலப் பயிர்களைப் பயிரிட அனுமதி- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், டிச 9- குறுகிய காலத்தில் விளைச்சலைத் தரக்கூடிய பயிர்களைப் மாநில அரசுக்கு சொந்தமான ரிசர்வ் நிலங்களில் பயிரிட விரும்புவோர் மாவட்ட நில அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தை செய்யலாம்.

மாநில சட்டமன்றத்தில் இன்று தாமான் டெம்ப்ளர் தொகுதி உறுப்பினர்  முகமது சானி ஹம்சான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.

விவசாய நோக்கத்திற்காக அரசாங்க ரிசர்வ் நிலங்களைப் பயன்படுத்த மாநில அரசு அனுமதி தருமா? என்று முகமது சானி கேள்வியெழுப்பியிருந்தார்.

அரசாங்க நிலங்களில் தற்காலிக குடியிருப்புக்கான அனுமதி தொடர்பான வழிகாட்டியை மாநில ஆட்சிக்குழு 19/2019 வது கூட்டத்தில் அங்கீகரித்துள்ளது. குறுகிய கால விவசாய நோக்கங்களுக்காக ரிசர்வ் நிலங்களை பயன்படுத்துவதற்கு தற்காலிக குடியிருப்பு அனுமதியைப் பெற இது வகை செய்கிறது என்று அவர் சொன்னார்.

ஆகவே, தற்காலிக அடிப்படையில் குறுகிய காலப் பயிர்களை நடவு செய்ய விரும்பும் பொதுமக்கள்  சிலாங்கூர் மாநில நில மற்றும் கனிம வளத் துறை இயக்குநரின் 4/2015 சுற்றறிக்கைக்கு ஏற்ப மாவட்ட நில அலுவலகங்களின் இதற்கான விண்ணப்பத்தை செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆற்றோர மற்றும் சாலையோர ரிசர்வ் நிலங்கள், மின் கம்பங்களுக்கு கீழுள்ள நிலங்கள் மற்றும் மாநில ரிசர்வ் நிலங்களில் குறுகிய காலப் பயிர்களை பயிரிடுவதற்கு இந்த அனுமதி வகை செய்கிறது என்றார் அவர்.


Pengarang :