ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

வெள்ளத்தால் மின் துண்டிப்பு- சீரமைப்பு பணிகளில் டி.என்.பி. ஊழியர்கள் தீவிரம்

ஷா ஆலம், டிச 18- தொடர் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் கோலக் கிள்ளான் மற்றும் கிள்ளானிலுள்ள பல துணை மின் நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின் விநியோகத் தடையை சரி செய்யும் பணியில் தெனாகா நேஷனல் ஊழியர்கள் நேற்று இரவு தொடங்கி தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

மின் விநியோகத்தை மீண்டும் ஏற்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

வட்டார சூழலுக்கு ஏற்ப மின்சார விநியோகத்தை சீர் செய்யும் பணி கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும். வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதோடு அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்று துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாட வேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.

மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அது குறித்து 15454 என்ற எண்களில் புகார் செய்யும்படியும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நேற்று மாலை 6.00 மணி முதல் கிள்ளான் மற்றும் கோலக் கிள்ளான் வட்டாரங்களில் பெய்த தொடர் மழை காரணமாக முக்கிய சாலைகள் உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :