ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு விநியோகம் போதுமான அளவு உள்ளது

காஜாங், டிச 29- இரண்டாவது வெள்ள அலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு போதுமான அளவு அத்தியாவசிய உணவுக் கையிருப்பு உள்ளதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.

பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளதாக அதன் துணையமைச்சர் டத்தோ ரோஸோல் வாகிட் கூறினார்.

அமைச்சு 100 விழுக்காடு தயார் நிலையில் உள்ளதை அறுதியிட்டுக் கூற முடியும். நம்மிடம் போதுமான அளவு கையிருப்பு உள்ளதோடு பொருள்களை வழங்க பல்வேறு தரப்பினர் தயாராகவும் உள்ளனர் என்றார் அவர்.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் எந்த நேரத்திலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு எத்திக்கா சென். பெர்ஹாட் நிறுவனம் வழங்கிய உணவுப் பொருள்கள்ளை யாயாசான் ஃபூட்பேங்க் மலேசியா செயலகத்திடம் ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கிழக்குக் கரை மாநிலங்களில் கடுமையான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னேற்பாடாக அம்மாநிலங்களுக்கான உதவியை யாயாசான் ஃபூட்பேங்க் அதிகரிக்கவுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த அறவாரியத்தின் வாயிலாக கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள சுமார் 5,000 குடும்பத்தினர் கடந்த 19 ஆம் தேதி முதல் அத்தியாவசிய உணவுப் பொருள்களைப் பெற்றுள்ளனர்.


Pengarang :