ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஸ்ரீ மூடாவில் மதகு அருகே உள்ள வீடமைப்புத் திட்டத்திற்கும் வெள்ளத்திற்கும் தொடர்பில்லை

ஷா ஆலம், டிச 30- இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் மதகு அருகே மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டத்திற்கும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுவதை சிலாங்கூர் அரசு வன்மையாக மறுத்துள்ளது.

இப்பகுதியில் தடுப்பணை எதுவும் உடையவில்லை என்பதும் தாங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

கம்போங் லொம்போங் பகுதியில் ஏற்பட்ட தடுப்பணை உடைந்த சம்பவமும் உடனடியாக சரி செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

நான் ஏற்கனவே பல முறை கூறியது போல் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக பெய்த மழையின் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

அந்த வீடமைப்புத் திட்டம் குறித்து கருத்துரைத்த அவர், கடந்த 2015 ஆம் ஆண்டில் அந்த திட்டத்திற்கான திட்டமிடல் அனுமதி வழங்கப்பட்டதாகவும் வெள்ள நீர் சேகரிப்பு குளம் நிர்மாணிப்பது உள்ளிட்ட அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஈராண்டுகளுக்குப் பின்னர் அத்திட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தடுப்பணை உடைந்தாலும் உடையாவிட்டாலும்கூட வெள்ளம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். காரணம், அதிகப்படியான மழையின் காரணமாக கிள்ளான் ஆறும் சுங்கை ராசாவ் ஆறும் ஒன்று சேருமிடத்தில் நீர் பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டது என்றார் அவர்.

தாமான் ஸ்ரீ மூடாவிலுள்ள மதகு அருகே செய்தியாளர்களைச் சந்தித்த போது இஷாம் இவ்வாறு கூறினார். சமூக மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவும் உடனிருந்தார்.

ஸ்ரீ மூடாவில் வெள்ளம் ஏற்பட்டதற்கு தடுப்பணை உடைந்ததும் மதகு அருகே மேற்கொள்ளப்படும்  வீடமைப்புத் திட்டமும் காரணம் என்று அரசியல்வாதி ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தது தொடர்பில் அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் வெள்ள அபாயத்தை குறைப்பதற்காக புதிய மதகை நிர்மாணிப்பதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.விநாடிக்கு 5,100 லிட்டர் நீரை இறைத்து வெளியேற்றும் திறன் கொண்ட பம்ப் உள்ளிட்ட வசதிகளை புதிய மதகு கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :