Majlis Perbandaran Kajang (MPKj)
ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

காஜாங் நகராண்மைக் கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

ஷா ஆலம், ஜன 26-  காஜாங் நகராண்மைக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முகப்பிட சேவையும் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் இம்மாதம் 28 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்படும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

இவ்வாண்டிற்கான மதிப்பீட்டு வரியை மின்னியல் முறையில் ஜனவரி மாதம் செலுத்தும் முதல் 5,000 பேருக்கும்  பிப்ரவரி மாதம் செலுத்தும் முதல் 5,000 பேருக்கும் தலா 10 வெள்ளிக்கான பற்றுச்சீட்டை வழங்குவதும் இக்கொண்டாட்டத்திற்கான சலுகைகளில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும்  மின்னியல் முறையில் வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த சலுகை வழங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

காஜாங் நகராண்மைக் கழகத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

இது தவிர வரும் பிப்ரவரி  28ஆம் தேதி  வரை வாகன நிறுத்தமிடக் குற்றங்களுக்கான அபராதத் தொகையில் 10 விழுக்காட்டு கழிவை நகராண்மைக் கழகம் வழங்கும் என்றும் அவர் சொன்னார்.

மேலும், சமூக மண்டபங்களுக்கான வாடகையில் 25 விழுக்காடு கழிவு, நகராண்மைக் கழக கடைகளுக்கான டிசம்பர் மாத வாடகையில் 50 விழுக்காடு குறைப்பு, அடுத்த ஆறு மாதங்களுக்கு நகராண்மைக் கழக கடைகளுக்கான வாடகையில் 25 விழுக்காடு கழிவு ஆகிய சலுகைகளும் வழங்கப்படும் என்றார் அவர்.


Pengarang :