ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTPBT

மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் துப்புரவுப் பணியில் தாமதம்

ஷா ஆலம், ஜன 30-  வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இரண்டாம் கட்ட துப்புரவுப் பணிகள் மே மாதம் நிறைவடையும் என கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

மிகவும்  குறுகலான மற்றும் ஆழமான வடிகால்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது தமது ஊழியர்களுக்கு பெரும் சவாலாக  உள்ளதாக  அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

சில இடங்களில் வடிகால்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளன. அவற்றை உடைத்தப் பின்னரே குப்பைகளை அகற்றுதல் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடிகிறது என அவர் சொன்னார்.

சிலாங்கூரில் குப்பைகளை அகற்றுவதற்கு பொறுப்பேற்றுள்ள மாநில அரசின் துணை நிறுவனமான கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த ஆண்டு டிசம்பர் 20 முதல் கட்டங்களாக சுத்தப்படுத்தி வருகிறது.

இம்மாதம் 7 ஆம் தேதி வரை ஊராட்சி மன்றங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மொத்தம் 78,000 மெட்ரிக் டன் குப்பைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அகற்றப்பட்டன.

ஜனவரி 8 ஆம் தேதி முதல் இந்நிறுவனம் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணியில்  அடைபட்ட வடிகால்களை சுத்தம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது ஆகிய பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. 

மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் இந்த துப்பரவுப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரம்லி தெரிவித்தார்.

Pengarang :