ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

மலேசியாவில் 150 இந்திய நிறுவனங்கள் 1,250 கோடி வெள்ளி முதலீடு- இந்தியத் தூதர் தகவல்

கோலாலம்பூர், ஜன 30  – மலேசியாவில் 150க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் 300 கோடி அமெரிக்க டாலர்  (1,250 கோடி வெள்ளி)  மதிப்பிலான் முதலீடுகளைச் செய்துள்ளன. இதன் வழி நாட்டில்  இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளின் உருவாக்கத்திற்கு அவை பங்களிப்பை வழங்கியுள்ளன.

இது தவிர, மலேசிய நிறுவனங்கள் இந்தியாவில் 700  கோடி அமெரிக்க டாலரை (2,930 கோடி வெள்ளி)  நேரடியாகவும் மூன்றாம் தரப்பு நாடுகள் மூலமாகவும் முதலீடு செய்துள்ளன என்று மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி கூறினார்.

மலேசியாவில்  தகவல் தொடர் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் நிதிச் சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாக அவர் சொன்னார்.

அனைத்துலக நிலையில் மலேசியாவின் முதல் பத்து வர்த்தக பங்காளி நாடுகளில் ஒன்றாக இந்தியா அண்மையில் உருவெடுத்துள்ளதாக ரெட்டி குறிப்பிட்டார்.

கோவிட்-19 தொற்றுநோய் இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2021 ஆம் ஆண்டில்  26 சதவீதம் வளர்ச்சியடைந்த்தோடு  ஒட்டுமொத்த வர்த்தகம் 1,700  கோடி டாலரை அமெரிக்க டாலரை எட்டியுள்ளது என்றார் அவர்.

மலேசியா-இந்தியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (மைசெகா) மற்றும் வர்த்தக, சரக்கு மற்றும் சேவைகள் மீதான ஆசியான்-இந்தியா விரிவான ஒப்பந்தங்கள் ஆகியவை இருதரப்பு உறவுகளை தொடர்ந்து மேம்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

2022ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் உரையாற்றிய போது ரெட்டி இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மலேசிய அரசாங்கத்தை பிரதிநிதித்து மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கலந்து கொண்டார்.

தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் அடங்கிய 250,000 இந்திய பிரஜைகளும் மலேசியப் பொருளாதாரத்தில் பங்களிப்பதாக ரெட்டி தமதுரையில் கூறினார்.

இந்திய குடிமக்கள் தங்கள் தொழிலைத் தொடர வசதி செய்துள்ள மலேசிய அரசாங்கத்திற்கு தாம் மனமார்ந்தப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.


Pengarang :