ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளானில் தினசரி 2,000 பேருக்கு வெள்ள உதவி நிதி விநியோகம்

கிள்ளான், பிப் 4- கிள்ளானில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணி கடந்த திங்கள் கிழமை தொடங்கி தினசரி மேற்கொள்ளப்படுகிறது. 

பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் 2,000 பேர் இந்நிதியைப் பெற்று வருவதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு இம்மாத இறுதிக்குள் உதவி நிதியை வழங்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

ஒரே வீட்டிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பம் கிடைக்கப் பெற்றது மற்றும் மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தை சில தரப்பினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயன்றது ஆகிய காரணங்களால் இந்நிதியைப் பகிர்ந்தளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முகமது பைசால் அப்துல் ராஜி, கிள்ளான் மாவட்ட அதிகாரி

கடந்த மாதம் 31 ஆம் தேதியுடன் இத்திட்டத்திற்கான விண்ணப்ப நாள் முடிவுக்கு வந்த நிலையில் சுமார் 73,000 விண்ணப்பங்கள் எங்களுக்கு கிடைத்தன. அவர்களில் 50,551 பேர் உதவித் தொகை பெறத் தகுதியுடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட வேளையில் 13,097 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டு விட்டது என்றார் அவர்.

வெள்ளத்தில் வீடுகளில் ஏற்பட்ட சேதத்திற்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படுகிறது. வாகனங்கள் மற்றும் வர்த்தக மையங்களுக்கு நிதி வழங்கப்படாது. அதே சமயம், குடும்பத் தலைவர் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த உதவித் திட்டத்தை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த முயல்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முடியும். எனினும், இதுவரை நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அனைவரும் நேர்மையை கடைபிடிக்கும் அதேவேளையில் பொறுமை காப்பர் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.


Pengarang :