ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடுகளை பழுதுபார்க்க 9,000 விண்ணப்பங்கள்

ஷா ஆலம், பிப் 8– கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்ப்பதற்காக 9,000 விண்ணப்பங்களை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாநில அரசு பெற்றுள்ளது.

அவற்றில் 3,000 விண்ணப்பங்கள் கடந்த வாரம் வரை மதிப்பீடு செய்யப்பட்டுவிட்டதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

அந்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் பணியை ஊராட்சி மன்றங்கள், சிலாங்கூர் மாநில வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம், சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் மற்றும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு ஆகிய தரப்பினர் மேற்கொண்டதாக அவர் சொன்னார்.

இந்த மதிப்பீட்டுப் பணிகள் இம்மாத இறுதிக்குள் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அவர், இதற்கான செலவினத் தொகையை மந்திரி புசார் மார்ச் மாதம் இறுதியில் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட வீடுகளை மத்திய அரசு சரி செய்து கொடுப்பதைக் காட்டிலும் சேதத்திற்கு உண்டான செலவுத் தொகையை ரொக்கமாக வழங்குவது உசிதமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீடு வீடாகச் செல்லும் சக்தி மாநில அரசுக்கு இல்லை. ரொக்கமாக பணத்தை வழங்குவது உதவிப் பணியை எளிதாக்கும் என்பதோடு பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது என்றார் அவர்.

மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 10,510 வீடுகள் பழுதுபார்க்கப்படும் என்பதோடு 44 வீடுகள் புதிதாக நிர்மாணித்து தரப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 3 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :