ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மார்ச் மத்திய பகுதி வரை வறட்சி நிலை நீடிக்கும்- திறந்த வெளியில் தீயிடுவதை தவிர்க்க வேண்டுகோள்

கோலாலம்பூர், பிப் 9– நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவக் காற்றின் இரண்டாம் கட்ட அலை வரும் மார்ச் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக  வறட்சியான மற்றும் வெப்பம் நிறைந்த சீதோஷண நிலை ஏற்படும் என்பதால் திறந்த வெளியில் தீயிடல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அக்காலக்கட்டத்தில் நாட்டில் மழைப் பொழிவு குறைவாக இருக்கும் என்பதால் தீபகற்ப மலேசியாவில் சீதோஷண நிலை வெப்பமாகவும் வறட்சியாகவும் காணப்படும் என்று சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் இலாகா கூறியது.

இத்தகைய வறட்சியான காலக்கட்டங்களில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய இடங்களில் குறிப்பாக  சதுப்பு நிலங்கள் மற்றும் குப்பை கொட்டும் மையங்களில் திறந்த வெளி தீயிடல் சமபவங்கள் அதிகம் நிகழும் சாத்தியம் உள்ளதாக அது தெரிவித்தது.

அதோடு மட்டுமின்றி, சட்டவிரோத குப்பைக் கொட்டும் இடங்கள், குடியிருப்பு பகுதிகளிலும் தீச்சம்பவங்கள் தொடர்பான புகார்கள்  அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திறந்த வெளிகளில் தீயிடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு சுற்றுச் சூழல் தரச் சட்டத்தின் கீழ் 500,000 லட்சம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது அதிகப்பட்சம் ஐந்தாண்டு வரையிலானச் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அத்துறை எச்சரித்துள்ளது.


Pengarang :