ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பொழுது போக்கு மையத்தில் போலீஸ் அதிரடி- 154 பேருக்கு  வெ.155,000 அபராதம்

கோலாலம்பூர், பிப் 13- இங்குள்ள பங்சார் பாரு, ஜாலான் தெலாவி 2 இல் உள்ள பொழுது போக்கு மையம் ஒன்றில் கூடியிருந்த போது தேசிய மீட்சித் நிலைக்கான இரண்டாம் கட்ட எஸ்.ஒ,பி. விதிகளைக் கடைபிடிக்கத் தவறியதற்காக 154 பேருக்கு மொத்தம் 155,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 10.52 மணியளவில் அந்த  மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது லைசென்ஸ் இன்றி அம்மையத்தை நடத்திய குற்றத்திற்காக 37 வயதுடைய  உள்நாட்டு ஆடவர் மற்றும் எட்டு அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டதாக பிரீக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிசாம் அப்துல் சுக்கோர் கூறினார்.

இந் நடவடிக்கையின் போது வர்த்தக ரசீதுகள், மதுபானங்கள், ஒலிபெருக்கி மற்றும் இசை நிகழ்ச்சிக்கான பல்வேறு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் 1952 ஆம் ஆண்டு கூட்டரசு பிரதேச பொழுது போக்குச் சட்டம், 1976 ஆம் ஆண்டு கலால் வரிச் சட்டம் மற்றும் 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் சொன்னார்.

கோவிட்.19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக எஸ்.ஒ.பி. விதிகள் மற்றும் தேசிய மீட்சி நிலைக்கான இரண்டாம் கட்ட விதிகளை மீறி இத்தகைய பொழுது போக்கு மையங்களில் ஒன்று கூடவேண்டாம் என்று பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :