ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

நெகிழிப்பை பயன்பாட்டிற்கு எதிராக சிலாங்கூர் அரசு தீவிரப் பிரசாரம்

ஷா ஆலம், பிப் 14– நெகிழிப் பை பயன்பாட்டிற்கு எதிராக சிலாங்கூர் மாநில அரசு இவ்வாண்டில் தீவிர பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

நெகிழிப் பைகளின் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு நாடப்படும் என்று சுற்றுச் சூழல்  மற்றும் பசுமை தொழில்நுட்பத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

நெகிழிப் பைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட சுற்றுச் சூழல் தொடர்பான அம்சங்களில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஊராட்சி மன்றங்கள் பங்கேற்பதையும் நாங்கள் ஊக்குவிக்கவுள்ளோம் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற 2021/2022 ஆம் ஆண்டிற்கான சுற்றுச் சூழல் மற்றும் பசுமைத் தொழில்நுட்ப மானியம் வழஙகும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வர்த்தக மையங்களில் நெகிழிப் பைகளுக்கு கட்டணம் விதிப்பதன் மூலம் மாநில அரசு கடந்தாண்டில் 64 லட்சம் வெள்ளியை வசூலித்ததாக கூறிய அவர், அதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 66 லட்சம் வெள்ளியாக இருந்தது என்றார்.

நெகிழிப் பைகளுக்கான கட்டண வசூல் குறைந்தது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கான நல்ல அறிகுறியாக விளங்குகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

தற்போது நெகிழிப் பைகளுக்கு வர்த்தக மையங்களில் விதிக்கப்படும்  20 காசு கட்டணம் போதுமானதாகும். இவ்விஷயத்தில் மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. வசூலிக்கப்பட்ட இந்த தொகை நெகிழிப் பைகளின் பயனீட்டைக் குறைப்பதற்கான பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.


Pengarang :