ECONOMYMEDIA STATEMENTSELANGORWANITA & KEBAJIKAN

சிலாங்கூர் ஹிஜ்ரா வணிகத் திட்டத்தின் வழி 1,637 மகளிர் பயனடைந்தனர்

ஷா ஆலம், பிப் 23- கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி முதல் நேற்று வரை “நாடி“ எனப்படும் நியாகா டாருள் ஏசான் திட்டத்தின் வழி வர்த்தக கடனுதவி வழங்குவதற்கு யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் 67 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சிலாங்கூரிலுள்ள 1,637 மகளிர் பயன் பெற்றதாக ஹிஜ்ரா அறவாரியத்தின் வர்த்தக ஊக்குவிப்பு பிரிவு நிர்வாகி முகமது ரிட்வான் அஸ்மாரா கூறினார்.

வர்த்தகத்தை தொடங்குவதற்கான மூலதன நிதியாக வெ.1,000 முதல் வெ.5,000 வரை அவர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வணிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை 117 பேர் 522,000 வெள்ளியை கடனுதவியாகப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.

இத்திட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் வர்த்தகம், உணவுத் தயாரிப்பு, விவசாயம், பதனிடு, கால் நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டு வருவதாக சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இந்த ‘‘நாடி“ வணிகத் திட்டத்தில் பங்கேற்பது எளிதானது எனக் கூறிய அவர், இதர மைக்ரோ கிரடிட் கடனுதவித் திட்டங்களைப் போல் வாராந்திர கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றார்.

சிறு வணிகர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு கித்தா சிலாங்கூர் உதவித் தொகுப்பின் கீழ் தொடக்க நிதியாக 1 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது. வணிகத்தில் ஈடுபடுவோர் குறைந்த பட்சம் 1,000 வெள்ளி முதல் அதிகப்பட்சம் 5,000 வெள்ளி வரை கடன் பெற முடியும். கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.


Pengarang :