ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

தாமான் புக்கிட் பெர்மாயில் நிலச்சரிவு- இருவர் மீட்பு, மூவரைத் தேடும் பணி தீவிரம்

கோலாலம்பூர், மார்ச் 11- அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாய் 2 இல் நேற்று  மாலை ஏற்பட்ட நிலச்சரிவில்  இருவர் மீட்கப்பட்ட வேளையில் மூவர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று மாலை 5.54 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 15 வீடுகளும் 10 கார்களும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலச்சரிவு குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து கம்போங் பண்டான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு வாகனத்தில் ஒன்பது வீரர்கள் சம்பவ இடத்திற்கு  விரைந்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.

மாலை 6.54 மணியளவில் முதலாவது நபர் மீட்கப்பட்டார். அவருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தன. இரவு 7.53 மணியளவில் பெண்மணி ஒருவரை வீரர்கள் மீட்டனர். மண் சரிவில் சிக்கிய மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த மண் சரிவில் சிக்கிக் கொண்டுள்ள மேலும் மூவரை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்பாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாரூக் ஏசாக் தெரிவித்தார்.

மண் சரிவில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறை, பொது தற்காப்பு படை மற்றும் ரேலா உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதை பெர்னாமா செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.

இந்த தேடி மீட்கும் பணியில் மோப்ப நாய்களும் இரு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.


Pengarang :