ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

பருவநிலை மாற்றம்- மத்திய அரசுடன் ஒத்துழைக்கச் சிலாங்கூர் அரசு தயார்

ஷா ஆலம், மார்ச் 15- பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக மத்திய அரசு மற்றும் இதர மாநிலங்களுடன் ஒத்துழைப்பை நல்கச் சிலாங்கூர் தயாராக உள்ளது.

எனினும், தற்போதைக்கு இப்பிரச்னையைக் கையாள்வதற்குச் சிலாங்கூர் மாநிலம் மட்டுமே சிறப்பு குழுவைக் கொண்டிருப்பதாகச் சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

பருவநிலை மாற்றம் தொடர்பில் ஆட்சிக்குழு நிலையில் நிரந்தரச் செயல்குழுவைக் கொண்டுள்ள ஒரே மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குகிறது. மற்ற மாநிலங்களில் அத்தகைய குழுக்கள் இல்லை.சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சிலும் பருவநிலை மாற்றம் என்ற பெயர் பிரத்தியேகமாக இடம் பெறவில்லை என்று அவர் சொன்னார்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று சிஜங்காங் உறுப்பினர் டத்தோ  டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளைக் களைய மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் சிலாங்கூர் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை டாக்டர் யூனஸ் வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே, கம்போங் துங்கு உறுப்பினர் லிம் யீ வேய் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஹீ லோய் சியான், பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துகளைப் பெறுவதற்காக கல்விமான்கள் மற்றும் தேசிய ஹைட்ரோலிக் ஆராய்ச்சிக் கழகம் ஆகிய தரப்பினருடன் இந்த செயல்குழு ஒத்துழைக்கும் என்று சொன்னார்.


Pengarang :