ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

சிலாங்கூர் அரசின் மானியத்திற்கு விண்ணப்பம் செய்யப் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை அவகாசம்

ஷா ஆலம், மார்ச் 16- சிலாங்கூர் அரசின் மானியத்திற்கு விண்ணப்பம் செய்யத் தமிழ் சீன, முபாலிக் மற்றும் மக்கள் சமயப் பள்ளிகளுக்கு  வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இம்மாதம் முதல் தொடங்கி இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பள்ளிகளில் சீரமைப்புப் பணிகளைத் தொடர்பில் நிதிக் கோரிக்கையை முன்வைக்கப் பள்ளிகளுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. விண்ணப்பத் தேதி முடிவுக்கு வந்தவுடன் மானியம் பெறுவதற்குத் தகுதியுள்ள பள்ளிகள் இறுதி செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த மானியத்திற்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 15 நாட்கள் உள்ளன. இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதைப் போல் ரமலான் அல்லது நோன்பு பெருநாளுக்குப் பின்னர் முதல் கட்ட நிதியளிப்பு நிகழ்வு நடத்தப்படும் என்று அவர்  தெரிவித்தார்.

கடந்த பெருந்தொற்று காலத்தில் இந்த மானியம் ஒரு முறை மட்டுமே  வழங்கப்பட்டது. இம்முறை குறைந்த பட்சம் இரு முறை அல்லது கூடின பட்சம் மூன்று முறை வழங்கப்படும் என்றார் அவர்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று பண்டமாரான் உறுப்பினர் லியோங் த சீ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூரிலுள்ள பள்ளிகளைத் தரம் உயர்த்துவது மற்றும் சீரமைப்பது போன்ற பணிகளுக்காக மாநில அரசு ஆண்டு தோறும் 2 கோடியே 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்து வருவதாக அமிருடின் சொன்னார்.

மக்கள் சமயப் பள்ளிகளுக்கு 1 கோடியே 30 லட்சம் வெள்ளியும் சீன ஆரம்பப் பள்ளிகளுக்கு 60 லட்சம் வெள்ளியும் தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளியும் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

இது தவிர, முபாலிக் பள்ளிகள், தேசிய தனியார் பள்ளிகள், தேசிய ஆரம்ப மற்றும் தேசிய இடைநிலைப்பள்ளிகளுக்கு தலா 10 லட்சம் வெள்ளி வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரிலுள்ள 637 பள்ளிகளை சீரமைப்பதற்காக 2 கோடியே 40 லட்சம் வெள்ளியை மந்திரி புசார் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வழங்கினார்.

அந்நிதியில் 93 லட்சம் வெள்ளியைச் சமயப் பள்ளிகளும் 90 லட்சம் வெள்ளியைச் சீனப் பள்ளிகளும் 45 லட்சம் வெள்ளியைத் தமிழ்ப்பள்ளிகளும் பெற்றன.


Pengarang :