ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு சிலாங்கூர் அரசின் பல்வேறு உதவிகள் – மந்திரி புசார்

ஷா ஆலம், மார்ச் 21 – சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு ஜனவரி முதல் மாநில அரசு RM1 கோடிக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த ஆண்டு பேரழிவைத் தொடர்ந்து தங்கள் வணிகங்களை சரிசெய்வதற்காக இந்த உதவி ஹிஜ்ரா சிலாங்கூர் கடன் சலுகைகள் வழி வழங்கப்பட்டுள்ளதாகவும், “பெரும்பாலான கடன் வாங்குபவர்கள் வெள்ளத்தில் தங்கள் வணிக ஸ்டால்கள், மளிகைக் கடைகள் மற்றும் கார் பட்டறைகளில் இழப்பை சந்தித்தவர்கள். சேமிப்பு எதுவுமின்றி அல்லல் பட்ட போது ஹிஜ்ரா சிலாங்கூர் கடன் சலுகைகள் உதவியது,” என்று அமிருடின் கூறினார்.

இன்று முன்னதாக சிலாங்கூர் மாநில சட்டப் பேரவை அமர்வின் போது, ​​வெள்ளத்தைத் தொடர்ந்து வணிகர்களுக்கான ஒதுக்கீடு தொகை மற்றும் உதவி வகை குறித்து கம்போங் துங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வெய் கேட்டதற்கு மந்திரி புசார் பதிலளித்தார்.

பந்துவான் பாங்கிட் சிலாங்கூர் முன்முயற்சியை செயல்படுத்துவதைக் குறிப்பிடுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலம் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் வழியாக நடக்கும் நிதி உதவி விநியோகம் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அமிருடின் நம்பிக்கை தெரிவித்தார்.

“இதுவரை வழங்கப்பட்ட உதவிக்கான சமீபத்திய கணக்கு RM10.8 கோடி ஆகும், மேலும் 8,000 குடும்பங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் பொருள் அவர்களுக்கு உதவ நமக்கு இன்னும் 80 லட்சம் ரிங்கிட் தேவைப்படுகிறது, இது மார்ச் 31 க்குள் செய்யப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ”என்று அவர் கூறினார்.

 


Pengarang :