ECONOMYMEDIA STATEMENTPBT

வெ.200,000 செலவில் 50 தொகுதிகளில் நோன்புப் பெருநாள் உதவித் திட்டம்- பெக்காவானிஸ் ஏற்பாடு

கோம்பாக், ஏப் 10- மாநிலத்திலுள்ள 50 தொகுதிகளில் இவ்வாண்டில் நோன்புப் பெருநாள் உதவித் திட்டங்களை மேற்கொள்ள பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பு 200,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தொகுதியும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு 100 வெள்ளி ரொக்கத் தொகையையும் இதர உதவிகளையும் வழங்கும் என்று அவ்வமைப்பின் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார்.

நாங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 4,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்நிதியை பகிர்ந்தளிக்கும் பணி இம்மாதம்  தொடங்கி மே மாதம் வரை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, ஒவ்வொரு தொகுதியிலும் உண்மையில் உதவி தேவைப்படுகின்ற 30 குடும்பங்களை அடையாளம் காண்பது தொகுதி பொறுப்பாளர்களின்  கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.

சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் நேற்று இங்கு நடைபெற்ற நோன்பு கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்ட இந்நிகழ்வில் சுங்கை துவா தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 30 குடும்பங்களுக்கு 100 வெள்ளி ரொக்கமும் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட்டன.

இந்த உதவி சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் சுமையைக் குறைக்க ஓரளவு உதவும் என்பதோடு நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்குரிய சூழலையும் ஏற்படுத்தும் என தாம் நம்புவதாக மஸ்டியானா கூறினார்.


Pengarang :