ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப். 28 முதல் 3 நாட்கள் மலிவு விற்பனை

காஜாங், ஏப் 18- நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாநில அரசின் பரிவுமிக்க வணிக திட்டத்தை மிகவும் விரிவான அளவில் நடத்த சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) திட்டமிட்டுள்ளது.

நோன்புப் பெருநாள் சமயத்தில் மேலும் அதிகமானோர் பயன்பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் ஏப்ரல் 28 முதல் 30 வரை இந்த மெகா விற்பனை இயக்கம் நடத்தப்படும் என்று பி.கே.பி.எஸ். தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

வரும் 28,29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நாங்கள் தொடர்ச்சியாக தினசரி 2,000 தட்டு முட்டைகள், 1,000 கோழிகளை விற்பனை வைக்கவிருக்கிறோம். இதன் வழி பி.கே.பி.எஸ். பொருள்களை பொதுமக்கள் வாங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

மேலும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு தற்போது இரண்டாக இருக்கும் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை நான்காக தாங்கள் உயர்த்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநில அரசின் பரிவுமிக்க வணிக திட்டத்தை மேற்கொள்வதற்காக ஷா ஆலம், சுங்கை துவா, சபாக் பெர்ணம், பாண்டான், மோரிப் மற்றும் தஞ்சோங் சிப்பாட் ஆகிய இடங்கள் தற்போதைக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.

செமினி தொகுதி நிலையிலான மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தை காஜா தாமான் ஜெனாரிஸ் குடியிருப்பாளர் சங்க நடவடிக்கை மையத்தில் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோழி, முட்டை, மீன் உள்ளிட்ட பொருள்களை குறைந்த விலையில் விற்பதை இலக்காக கொண்ட மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தை மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கியது.


Pengarang :