ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

டிங்கி சம்பவங்கள் அதிகரிப்பு- தூய்மையைப் பேணும்படி சுபாங் ஜெயா குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்து

சுபாங் ஜெயா, ஏப் 22- டிங்கி காய்ச்சல் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக தூய்மையைத் தொடர்ந்து பேணி வரும்படி சுபாங் ஜெயா வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்பதன் வழி டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தாங்கள் முயன்று வருவதாக சுபாங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ஜொஹாரி அனுவார் கூறினார்.

எனினும், பொது மக்களும் தங்களின் இந்த முயற்சிக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், தினமும் பத்து நிமிடங்களைச் செலவிட்டு வீட்டில் நீர் தேங்கியுள்ள பகுதிகளைச் சோதனையிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

முன்பு நான்காக இருந்த டிங்கி சம்பவங்கள் அதிகம் உள்ள இடங்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக குறைந்துள்ளது. எஸ்எஸ்19/1, யுஎஸ்ஜே2/1 மற்றும் தாமான் பிங்கிரான் யுஎஸ்ஜே 1 ஆகியவையே அந்த மூன்று பகுதிகளாகும் என்றார் அவர்.

சுபாங் ஜெயா மாநகர் மன்ற நிலையிலான 2022 ஆம் ஆண்டு ஆட்டிஸம் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளி சிறார்களுக்கான பிரத்தியேக விளையாட்டு மைதானத்தை திறந்த வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் அதே காலக்கட்டத்தில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 200க்கும் மேல் அதிகரித்துள்ளதாக ஜொஹரி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.


Pengarang :