ECONOMYMEDIA STATEMENTSELANGOR

விலைக்கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய 10 வணிக மையங்கள் மீது நடவடிக்கை

புத்ரா ஜெயா, மே 5– நோன்புப் பெருநாளின் போது அமல்படுத்தப்பட்ட உச்சவரம்பு விலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் இம்மாதம் 4 ஆம் தேதி வரை 6,702 மொத்த மற்றும் சில்லறை வணிக மையங்கள் மீது உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு சோதனை மேற்கொண்டது.

அச்சோதனையின் போது 2011 ஆம் ஆண்டு கொள்ளை லாப தடுப்புச் சட்ட விதிகளை 10 வர்த்தக மையங்கள் மீறியது கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் அஸ்மான் ஆடாம் கூறினார்.

விலைப்பட்டியல் வைக்காதது மற்றும் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பு விலையை விட அதிக விலையில் பொருள்களை விற்றது  உள்ளிட்ட குற்றங்களை அந்த வணிக மையங்கள் புரிந்துள்ளன என்று அவர் சொன்னார்.

இந்த உச்சவரம்பு விலைத் திட்டத்தின் அமலாக்க காலமான வரும் மே 10 ஆம் தேதி வரையிலும் வரும் ஜூன் 5 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் கோழி மற்றும் முட்டை விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கை காலம் வரையிலும் இச்சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த உச்சவரம்பு விலைத் திட்டத்தை மீறும் வணிகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


Pengarang :