ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

அடை மழை காரணமாக ஜண்டா பாயிக் பகுதியில் திடீர் வெள்ளம்

குவாந்தான், மே 11- இன்று விடியற்காலை 3.00 மணி முதல் பெய்த அடை மழை காரணமாக பெந்தோங் அருகிலுள்ள ஜண்டா பாயிக் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இன்று காலை 8.00 மணி வரை இப்பகுதியிலுள்ள நான்கு கிராமங்களில் உள்ள 140 வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக மலேசிய பொது தற்காப்புத் படையின் பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் பெந்தோங் மாவட்ட செயலகம் கூறியது.

இந்த வெள்ளப் பேரிடரில் யாருக்கும் உயிருடற்சேதம் ஏற்படவில்லை என்று அதன் பேச்சாளர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ளம் வடிந்து வரும் நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் ஜய்ஹாம் முகமது கஹார் தெரிவித்தார்.

வெள்ளம் சூழ்ந்த இடங்களில்  நிலைமையைக் கண்காணிக்கும் பணியில் பல்வேறு தரப்பினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

நிலச்சரிவு காரணமாக புக்கிட் திங்கி-கெந்திங் செம்பா பழைய சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. எனினும் ஜண்டா பாயிக் நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து சீராக உள்ளது என்றார் அவர்.

இங்கு பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள போதிலும் துயர் துடைப்பு மையம் எதுவும் திறக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :