ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோழி பற்றாக்குறை- உற்பத்தியாளர்களுடன் விவாதிக்க மாநில அரசு தயார்

கோம்பாக், மே 22- சிலாங்கூரில் கோழியின் விநியோகம் முன்பை விட குறைவாக இருந்தாலும் பயனீட்டாளர்களின் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு அந்த உணவுப் பொருளின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது.

தற்போது அதிகப் பட்ச எண்ணிக்கையில் கோழியை விநியோகிக்க முடியாத நிலையில் உற்பத்தியாளர்கள் உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எனினும், மாநிலத்திலுள்ள பயனீட்டாளர்களுக்கு விநியோகிப்பதற்கு ஏதுவாக குறிப்பிட்ட அளவிலான கோழி கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் தாங்கள் பேச்சு நடத்தவுள்ளதாக அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் உற்பத்தியாளர்கள் உள்பட எந்த தரப்பினருடனும் பேச்சு நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். கோழி பற்றாக்குறைப் பிரச்னை பயனீட்டாளர்களை மட்டுமின்றி உற்பத்தியாளர்களையும் பெரிதும் பாதித்துள்ளது என்றார் அவர்.

இப்பிரச்னை காரணமாக கோழி வளர்ப்போரும் வியாபாரிகளும் நீண்ட காலத்திற்கு இழப்பை எதிர்நோக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள டேவான் பெரிங்கினில் நடைபெற்ற கோம்பாக் தொகுதிக்கான கெஅடிலான் கட்சித்  தேர்லைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கோழிப் பற்றாக்குறைப் பிரச்னையைத் தீர்க்கும் குறுகிய கால நடவடிக்கையாக அந்த உணவுப் பொருளுக்கான பற்றாக்குறை நிலவும் மாநிலங்களுக்கு கூடுதலாக கோழிகள் அனுப்பப்படும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு முன்னதாக கூறியிருந்தது.


Pengarang :