ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சோள விதை உற்பத்தி தொடர்பில் இரு நிறுவனங்களுடன் சிலாங்கூர் அரசு ஒப்பந்தம்

கோம்பாக், மே 24- கோழி தீவனத்திற்கு மாற்றாக சோள விதைகளை உற்பத்தி செய்வது தொடர்பில் இரு தனியார் நிறுவனங்களுடன் சிலாங்கூர் அரசு  பூர்வாங்க அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

கோழி தீவன விலை அதிகரிப்பை சமாளிப்பதற்கு நீண்ட கால அடிப்படையில் வகுக்கப்பட்ட திட்டமாக இது விளங்குகிறது என்று நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படைத் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

கோழி விலையில் 85 விழுக்காடு அதன் தீவனத்தை சார்ந்திருக்கிறது. நாம் சொந்தமாக தீவனத்தை உற்பத்தி செய்யும் பட்சத்தில் கோழியின் விலையை குறைக்க முடியும் என அவர் சொன்னார்.

டன் ஒன்றுக்கு 500 வெள்ளி செலவில் சோளத்தை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக நாம் நிலத்தை தயார் செய்துள்ளோம். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் அதன் விலை டன் ஒன்றுக்கு 1,000 வெள்ளியை எட்டும் என அவர் தெரிவித்தார்.

இங்குள்ள கோம்பாக் மாவட்ட விவசாய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த சோள பயரீட்டுத் திட்டத்தில் ஈடுபட மற்ற மாநிலங்களும் ஆர்வம் காட்டினால் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும் என நம்புகிறேன். நிலம் அதிகம் உள்ள மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தலாம். இதனால் கோழி உற்பத்தியும் அதிகரிக்கும் என்றார் அவர்.

சபாக் பெர்ணம் மாவட்டத்தில் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த பயிரீட்டுத் திட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்தார்.

கோழி தீவினப் பிரச்னைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணும் நோக்கில் தானியச் சோளத்தை பயிரிடும் திட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் கோல லங்காட் செலத்தான் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கிம்மாஸ் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படுவதையும்  அவர் சுட்டிக் காட்டினார்.

 


Pengarang :