ECONOMYNATIONALTOURISM

மீட்சி காண்கிறது சுற்றுலாத் துறை- ஆண்டு இறுதிக்குள் 50 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்க்க இலக்கு

கோலாலம்பூர், ஜூன் 9– நாட்டிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு இறுதிவாக்கில் ஐம்பது லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கி நாட்டில் கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டது மற்றும் அனைத்துலக சுற்றுலா நடவடிக்கைகள் புத்துயிர் பெற்றது போன்ற காரணங்களால் சுற்றுலாத் துறை மீட்சியை நோக்கி பயணிப்பதாக மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கத்தின் (மாட்டா) தலைவர் டான் கோக் லியான் கூறினார்.

அனைத்துலக சுற்றுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்கியது முதல் சுமார் பத்து லட்சம் சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களில் 600,000 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களாவர் என்று அவர் தெரிவித்தார்.

இருந்த போதிலும், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் இதர ஆசியான் நாடுகளிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதன் அடிப்படையில் ஐம்பது லட்சம் சுற்றுப்பயணிகள் என்ற இலக்கை அடைய முடியும் எனக் கருதுகிறோம் என்றார் அவர்.

ஏப்ரல் முதல் தேதி தொடங்கி நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறுவதாக அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அனைத்துலக சுற்றுப்பயணிகளுக்கு நாட்டின் எல்லைகளும் திறக்கப்படுவதாக அறிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி இயக்கத்தையொட்டி அரசாங்கம் இந்த முடிவை எடுத்தது. இதன் வழி கடந்த ஈராண்டுகளாக கோவிட்-19 நோய் தொற்றுடன் நடத்திய போராட்டத்திலிருந்து நாடு விடுபட்டு ஏறக்குறைய வழக்கமான வாழ்க்கை சூழலை அனுபவிப்பதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டது.


Pengarang :