ECONOMYMEDIA STATEMENTPBT

பெ.ஜெயா மாநகர் மன்றத்தின் நிறைவு விழா- 150 குடும்பங்களுக்கு உதவி பொருள் விநியோகம்

பெட்டாலிங் ஜெயா ஜூன் 18- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் 16ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி வசதி குறைந்த 150 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன.

கோவிட்-19 பெருந்தொற்று தாக்கம் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அத்தரப்பினரின் சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கில் தலா 130 வெள்ளி மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டதாக மாநகர் மன்ற டத்தோ பண்டார் அஸான் முகமது  அமிர் கூறினார்.

நோய் காரணமாக படுத்த படுக்கையாக இருப்பவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள் அதிகமானோரை பராமரிக்கும் நிலையில் உள்ளவர்கள் மற்றும் மாதம் 2,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறுபவர்களுக்கு இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இன்றைய நிகழ்வில் 22 பேருக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்ட வேளையில் எஞ்சியோர் அடுத்த வாரம் இப்பொருள்களை பெறுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

உணவுக் கூடைகள் தவிர்த்து மின்சார சாதனங்கள் மற்றும் சமையலறை உபகரணங்களையும் வழங்குகிறோம். வசதி  குறைந்தவர்களிடம் பரிவை புலப்பத்தும் விதமாகவும் பொதுமக்களுடன் நட்புறவை பேணும் வகையிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றார் அவர்.

இங்குள்ள லெம்பா சுபாங், மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் இந்த உதவிப் பொருள்களை விநியோகம் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :