ECONOMYMEDIA STATEMENT

தூய்மையின்றி செயல்பட்ட 34 உணவகங்களை மூட சிலாங்கூர் சுகாதாரத் துறை உத்தரவு

ஷா ஆலம், ஜூலை 1– தூய்மையின்றியும்  எலி மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்தும் காணப்பட்டதோடு குறைவான தர நிர்ணயத்தையும் கொண்டிருந்த 34 உணவகங்களை மூட சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டது.

தூய்மை உணவக சோதனை நடவடிக்கையின் கீழ்  நேற்று முன்தினம் மாநிலத்தில் உள்ள 207 உணவகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அந்த 34 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் கூறினார்.

மேலும் பல்வேறு குற்றங்களுக்காக 2009 ஆம் ஆண்டு உணவுத் தூய்மை விதிகளின் 32பி பிரிவின் கீழ் உணவக உரிமையாளர்களுக்கு 167,300 வெள்ளி மதிப்புள்ள 263 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயனீட்டாளர்களின் சுகாதாரத்தை பாதுகாப்பது மற்றும் உணவில் நச்சுத் தன்மை ஏற்படுவதை தடுப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

உணவில் நச்சுத் தன்மை பிரச்னை ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய உணவகங்கள் உயர்ந்த பட்ச தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது தவிர, 1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அனைத்து உணவு விற்பனை மையங்களும் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :