ECONOMYMEDIA STATEMENTSELANGOR

அடிப்படை வசதி, தூய்மைக்கேடு பிரச்னைகளை சட்டமன்றத்தில் எழுப்புவேன்- ரவாங் உறுப்பினர் கூறுகிறார்

செலாயாங், ஜூலை 2- வீடமைப்புப்  பகுதிகளில் சீரமைக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் தொடர்பான விவகாரங்ளை தாம் சட்டமன்றத்தில் எழுப்பவுள்ளதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

அதிகரித்து வரும் வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப பணிகளுக்கேற்ப மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

வீடமைப்புத் திட்டங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அனைத்து நிலையிலும் சௌகர்யமான சூழலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

அடிப்படை வசதிகள் தவிர்த்து ரவாங் தொழில்பேட்டைப் பகுதிகளில் காணப்படும் தூய்மைக்கேடு பிரச்னைகளையும் தாம் சட்டமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்கள் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டுள்ளது. ஆகவே, இவ்விவகாரத்தை சட்டமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல விரும்புகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குள்ள தாமான் புக்கிட் ரவாங் ஜெயாவில் பார்வை குறைபாடு பிரச்னையை எதிர்நோக்கியுள் முதியவரை சென்று கண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

பதினான்காவது மாநில சட்டமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான இரண்டாம் கூட்டத் தொடர் வரும் ஜூலை 25 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


Pengarang :