ALAM SEKITAR & CUACAECONOMY

பாலிங் வெள்ளப் பேரிடர்- 495 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

பாலிங், ஜூலை 6– வெள்ளம் காரணமாக பாலிங் மாவட்டத்திலுள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 அளவில் 495 ஆக குறைந்தது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,424 பேராக இருந்தது.

அங்குள்ள இரு பள்ளிகளில் தங்கியிருந்த மாணவர்களை அவர்களின்  பெற்றோர்கள் அழைத்துச் சென்ற காரணத்தால் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக பாலிங் மாவட்ட பொது தற்காப்புத் துறை அதிகாரி கேப்டன் (ஓய்வுபெற்ற) ரஷிடா காசிம் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி 78 மாணவர்கள் மட்டுமே நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

ஜெராய் இடைநிலைப்பள்ளியில் செயல்படும் துயர் துடைப்பு மையத்தில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேரும் அன் நுர் சுராவில் செயல்படும் துயர் துடைப்பு மையத்தில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 258 பேரும் தற்போது தங்கியுள்ளனர் என்றார் அவர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தரவுகளைப் பெறுவதற்காக பேரிடர் கட்டுப்பாட்டு நடவடிக்கை அறை தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த திங்கள்கிழமை பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் மூவர் உயிரிழந்ததோடு ஏழு வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.


Pengarang :