ECONOMYSELANGORSMART SELANGOR

மாநில வரலாற்றில் முதன் முறையாக முதலாவது சிலாங்கூர் திட்டம் தாக்கல்

ஷா ஆலம், ஜூலை 27– மாநில வரலாற்றில் முதன் முறையாக முதலாவது சிலாங்கூர் திட்டத்தை மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் தரமான வாழ்க்கை நிலை உயர்வுக்கும் இடையே சமநிலையை உருவாக்கும் நோக்கில் 14 பெரு வழிகாட்டிகள் இந்த திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6.5 முதல் 7.00 விழுக்காடு வரையில் உயர்த்துவதையும் முதலீட்டு மதிப்பை ஆண்டுக்கு 3,500 கோடி வரை அதிகரிப்பதையும் இந்த திட்டம் இலக்காக கொண்டுள்ளதாக அமிருடின் சொன்னார்.

ஒவ்வொரு 100 வளாகங்களுக்கும் 70 விழுக்காடு என்ற அளவில் அகண்ட அலைவரிசை ஊடுருவலை உறுதி செய்வது மற்றும் 38 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவது ஆகிய திட்டங்கள் மீதும் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த முதலாவது சிலாங்கூர் திட்டமானது வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 விழுக்காட்டு பங்களிப்பை வழங்குவதை மட்டும் இலக்காக கொண்டிருக்கவில்லை. மாறாக, பொருளாதார மேம்பாடும் மக்கள் வாழ்க்கைத் தர உயர்வும் சமநிலையாக இருப்பதை உறுதி செய்வதையும் அது நோக்கமாக கொண்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

சிலாங்கூரிலுள்ள அந்தந்த இடங்களில் குறிப்பாக துரித நகரமயமாகி வரும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எது தேவையோ அதனை வழங்குவதன் மூலம் சமநிலையற்றப் போக்கை குறைக்க முடியும் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் முதல் சிலாங்கூர் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இதனைக் கூறினார்.

இந்த செயல் திட்டம் கட்டுப்படி விலை வீடுகளுக்கான தேவையை ஈடுசெய்வதில் உள்ள சவால்களை உள்ளடக்கியுள்ளதோடு வசிப்பதற்கு உகந்த மாநிலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலான ஆக்ககரமான சேவை வழங்கல் முறையையும் கொண்டுள்ளது என அவர் சொன்னார்.

வரும் 2025 ஆம் ஆண்டுவாக்கில் அடைய திட்டமிடப்பட்டுள்ள இதர பிரதான திட்டங்கள் வருமாறு-

• சராசரி குடும்ப வருமானத்தை 9,290 வெள்ளியாக உயர்த்துவது
• முழு வறுமையின் அளவை 0.7 விழுக்காடாக குறைப்பது
• ஒப்பீட்டு வறுமையின் அளவை 11 விழுக்காடாக குறைப்பது
• குடும்ப சுபிட்சத்தின் குறியீட்டு அளவை 8.0 புள்ளிகளாக ஆக்குவது
• 2005 ஆம் ஆண்டு அடர்த்தி அடிப்படையில் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தின் அடர்த்தியை 35 விழுக்காடாக குறைப்பது
• சுத்தமான நீர் விநியோகத்தை உறுதி செய்வது
• கழிவு பொருள் மறுசுழற்சியை 15 விழுக்காடாக உயர்த்துவது
• தற்போதைய  மேம்பாட்டின் அடிப்படையில் அதிக தாக்கம் கொண்ட முதல் சிலாங்கூர் திட்டங்களை 100 விழுக்காடு பூர்த்தி செய்வது
• தேசிய நிலையில் ஊராட்சி மன்றங்களை முதல் 10 இடங்களுக்கு தரம் உயர்த்துவது
• முடிவு தொடங்கி முடிவு வரை வடிவில் அரசாங்க சேவையை 85 விழுக்காடு இலக்கவியல் மயமாக்குவது


Pengarang :