ECONOMYMEDIA STATEMENT

உம்ரா யாத்திரை மோசடி- நிறுவன இயக்குநருக்கு 10 ஆண்டுச் சிறை

சுங்கை பட்டாணி, ஆக 9- கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கு இடையில் உம்ரா யாத்திரை மற்றும் எகிப்து சுற்றுலா சம்பந்தப்பட்ட 23 மோசடி குற்றச்சாட்டுகள்  தொடர்பில்  நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநருக்கு இங்குள்ள  மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

குற்றம் சாட்டப்பட்ட மிஸ்பஹல்முனிர் ஓமார் (வயது 56) மீதான குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதில் அரசுத் தரப்பு வெற்றி கண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் ஆரிப் முகமது ஷெரீப் இந்த தீர்ப்பை வழங்கினார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 ஆண்டுகள் வீதம்  மொத்தம் 230 ஆண்டுகள் சிறைத்தண்டனையை  மாஜிஸ்திரேட் வழங்கி தீர்ப்பளித்தார்.

இத்தண்டனையை  கைது செய்யப்பட்ட நாளிலிருந்து  ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் 50 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவருக்கு பிரம்படி வழங்குவதிலிருந்து நீதிமன்றம் விலக்கு அளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து  உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யும் வரை தண்டனையை ஒத்தி வைப்பதற்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


Pengarang :