ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSMART SELANGOR

பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள சிறப்புத் திட்டம்- மாநில அரசு வரைகிறது

ஷா ஆலம், ஆக 27- அடுத்தாண்டு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள மாநில அரசு திட்டங்களை வரைந்து வருகிறது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போல்  மக்களின் பொருளாதாரத்திற்கு உந்துதல் அளிக்கக்கூடிய திட்டங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கூறினார்.

கட்டுப்பாடற்ற பணவீக்கம் மற்றும் இன்னும் சுறுசுறுப்படையாத பொருளாதாரம் போன்ற பொருளாதார மந்த நிலைக்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கி விட்டன என்று அவர் சொன்னார்.

இதனைத் கருத்தில் கொண்டு கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அமல்படுத்தப்பட்டதைப் போல் உணவுக் கூடைத் திட்டம், பொருளாதார மீட்சித் திட்டம் போன்றவற்றை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

இங்குள்ள புக்கிட் ஜெலுத்தோங்கில் ரூமா இடாமான் வீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அடுத்தாண்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் சாத்தியத்தை மதிப்பீடு செய்வதற்கு செயல் குழு ஒன்றை அமைக்கும்படி முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம், மாநில கருவூலம் மற்றும் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் ஆகிய தரப்பினரை தாம் பணித்துள்ளதாகவும் அமிருடின் கூறினார்.

 


Pengarang :