ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஒன்பது மாவட்டங்களில் குறைந்த பட்சம் வெ.5.00 விலையில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை

ஷா ஆலம், ஆக 31- வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கி மூன்று மாதங்களுக்கு மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களில் குறைந்த பட்சம் 5.00 வெள்ளி விலையில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் திட்டம் ஏக காலத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் சிலாங்கூர் மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் குறித்த விபரங்கள் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்த்தின் (பி.கே.பி.எஸ்.) சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த மானிய விலை விற்பனைத் திட்டத்திற்கு உண்டாகும் செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்காக மாநில அரசு கூடுதலாக ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தில் 1,000 கோழிகள், 1,000 தட்டு முட்டைகள், மீன்கள் என்ற அடிப்படையில் உணவு மூலப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்படும். தேவை அதிகம் இருக்கும் பட்சத்தில் கையிருப்பும் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில் ஜூவாலான் ஏசான் விற்பனைத் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மலிவு விற்பனையின் போது ஐந்து வெள்ளி விலையில் விற்கப்படும் பொருள்களில் கோழி, முட்டை, இறைச்சி, மீன் மற்றும் ஐந்து கிலோ அரிசி ஆகியவையும்  அடங்கும் என்று இஷாம் குறிப்பிட்டார்.

சந்தையில் 1.8 கிலோ கோழி 16 வெள்ளிக்கும் ‘மீன் 10 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு வெ 13.90 விலையிலும் ஐந்து கிலோ அரிசி 13 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.  நாம் வழங்கும் விலையில் எங்கும் பொருள்கள் கிடைக்காது. மக்களின் நலனுக்காக மலிவு விலையில் இவற்றை விற்கிறோம் என்றார் அவர்.


Pengarang :