ECONOMYMEDIA STATEMENT

ஷா ஆலம் லாக்கப்பில் கைதி திடீர் மரணம்

கோலாலம்பூர், செப் 12- ஷா ஆலமில் உள்ள மத்திய தடுப்புக் காவல் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு ஆடவர் ஒருவர் திடீரென மரணமடைந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

முப்பத்து மூன்று வயதுடைய அந்த ஆடவர் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி முதல் அங்குள்ள லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அரச மலேசிய போலீஸ் படையின் தகவல் தொடர்பு பிரிவுத் தலைவர் ஏசிபி ஸ்கந்தகுரு ஆனந்தன் கூறினார்.

அந்த ஆடவர் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவு மற்றும் 1985 ஆம் ஆண்டு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் பிரிவுகளின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என அவர் சொன்னார்.

நேற்று அதிகாலை 4.59 மணியளவில் அந்த ஆடவர் மயங்கிய நிலையில் கிடக்கக் காணப்பட்டார். உடனடி மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவமனைத் தரப்புடன் தொடர்பு கொள்ளப்பட்டது. அவ்வாடவர் இறந்து விட்டதை ஷா ஆலம் மருத்துவமனையின் மருத்துவர்கள் அதிகாலை 5.20 மணியளவில் உறுதி செய்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சவப் பரிசோதனைக்காக அவ்வாடவரின் உடல் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் புக்கிட் அமான் குற்றவியல் விசாரணை, தடுப்புக் காவல் மரண விசாரணை பிரிவு மற்றும் விதிமுறை பின்பற்றல் பிரிவு ஆகியவை விசாரணை மேற்கொள்ளும் என அவர் கூறினார்.


Pengarang :