ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மேரு, தாமான் இண்டாவில் மலிவு விற்பனை- மழைக்கு மத்தியிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு

கிள்ளான், செப் 18:- மேரு,  தாமான் டேசா இண்டாவில்  இன்று நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனைத் திட்டத்திற்கு  மழைக்கு மத்தியிலும்  உள்ளூர் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சந்தையை விட மலிவான விலையில் விற்கப்படும் பல்வேறு உணவு மூலப் பொருட்களைப் பெறுவதற்கான அரிய  வாய்ப்பை  அவ்வட்டார குடியிருப்பாளர்கள் வீணடிக்க தவறவில்லை என்பதை சிலாங்கூர் கினியின் ஆய்வு காட்டியது.

இன்றைய  விற்பனையில் அதிகம் விலை போன பொருள்களில்  கோழி மற்றும் முட்டை ஆகியவையும் அடங்கும் என்று   விற்பனை நிர்வாகி அலிப் ரம்லி கூறினார்.

நாங்கள்   தலா 300  பொருள்கள் என்ற எண்ணிக்கையில் கோழி, இறைச்சி,  மீன், முட்டை, அரிசி மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தோம். மழை பெய்த போதிலும் பொருள்களை வாங்க குடியிருப்பாளர்கள்  வரிசையில் நின்றார்கள்.  மலிவு விலையில் கிடைக்கும் இப்பொருள்களை வாங்க அவர்கள் ஆர்வம் காட்டியதை இது காட்டுகிறது என்றார் அவர்.

கோழி மற்றும் முட்டையின் விற்பனை  ஒரு நபருக்கு இரண்டு எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  மற்ற அடிப்படை பொருட்கள் நான்கு அல்லது ஐந்து வரை வாங்கலாம். ஏனெனில் பெரும்பாலான மக்கள் இந்தப் பொருள்களை பெரிய அளவில் வாங்குவதில்லை  என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், விற்கப்படாத பொருட்கள் இருந்தாலும் விற்பனை நடவடிக்கை திட்டமிட்டபடி மதியம் 1 மணியுடன் முடிவுக்கு வந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜூவாலான் ஏசான் ராக்யாட் எனும் இந்த மலிவு விற்பனைத் ஆகஸ்டு 31 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது அறிவித்தார்.

சந்தையை விட 30 சதவீதம் குறைவான விலையில் அடிப்படை உணவு பொருள்களை விற்பனை செய்யும் இந்த திட்டத்திற்கு ஒரு கோடி வெள்ளி ஒதுக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :