ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அனிஸ் திட்டங்கள் மூலம் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை- மந்திரி புசார்

ஷா ஆலம், செப் 18-  கடந்த நான்கு ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் சிலாங்கூர் சிறப்புக் குழந்தைகளுக்கான (அனிஸ்) உதவித் திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்கு மாநில அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.

அக்காலக்கட்டத்தில் நிதி மற்றும் அதிகாரமளிக்கும் திட்டங்களின் வடிவத்தில் உதவிகள் வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

2018 ஆம் ஆண்டு முதல், சிலாங்கூரில் உள்ள சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள், கல்வியாளர்கள், அமைப்புகளின் நடத்துநர்கள் மற்றும்  மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான அமைப்புகளுக்கு அனிஸ் ஆக்கத் திறனளித்து அவர்களை உலகின் சவால்களை எதிர்கொள்வதற்குரிய ஆற்றலைக் கொண்டவர்களாக உருவாக்கி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

சிறப்புக் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் செழுமையை நிலைநிறுத்த உதவும் முயற்சியில் சிலாங்கூர் முன்னோடியாக உள்ளது என்று அவர் இன்று தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் அரசாங்கம் மக்களின் சுபிட்சம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப நலத்திட்டங்களை தீவிரமாக மேம்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மொத்தம் 692 பேருக்கு உதவி, அனிஸ் அகாடமி வாயிலாக 2,700 பேருக்கு பயிற்சி உட்பட  அனிஸ்  திட்டங்களுக்காக கடந்த ஆண்டு மொத்தம் 33 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டதை அமிருடின்  விளக்கப்படம் ஒன்றின் வாயிலாக  சுட்டிக் காட்டினார்.


Pengarang :