ECONOMYMEDIA STATEMENTSUKANKINI

சுக்மா ஆண்கள் கால்பந்து போட்டியில் கைகலப்பு-  போலீஸ் விசாரணை

ஷா ஆலம், செப் 22- மலேசிய விளையாட்டுப் போட்டியின் (சுக்மா) ஆண்கள் அரையிறுதிப் ஆட்டத்தின் போது நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் தயார் செய்து வருகின்றனர்.

இங்குள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக (யுஐடிஎம்.) அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டரசு பிரதேசத்திற்கும் பினாங்கிற்கும் இடையிலான ஆட்டத்தின் போது இந்த கைகலப்பு நிகழ்ந்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோதல் தொடர்பில் தமது தரப்பு புகாரைப் பெற்றுள்ளதாக கூறிய ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம், பயிற்றுநர்கள், நடுவர்கள், விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் தாங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகச் சொன்னார்.

ஆட்டக்காரர் ஒருவருக்கு சிவப்பு கார்டு வழங்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட குழுவின் அதிகாரி ஒருவர் அதிருப்தியடைந்த காரணத்தால் திடலில் குழப்பம் ஏற்பட்டு களேபரத்தில் முடிந்ததாக அவர் கூறினார்.

இந்த களேபரம் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய போட்டிகளின் போது சினமூட்டும் நடவடிக்கைகளும் கைகலப்புகளும் ஏற்படுவதை தவிர்க்க உணர்ச்சி வேகத்தில் செயல்படுவதை தவிர்க்கும்படி அனைத்து தரப்பினரையும் ஏசிபி இக்பால் கேட்டுக் கொண்டார்.

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் எதிரணி ஆட்டக்காரரை உதைத்த காரணத்தால் ஆட்டத்தின் கூட்டரசு பிரதேச விளையாட்டாளர் முகமது இமான் ஃபக்ருல்லா ஜம்ரிக்கு நடுவர் சிவப்பு கார்டை காட்டினார். இதனைத் தொடர்ந்து திடலில் பதற்றம் உண்டாகி ஆட்டக்காரர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 


Pengarang :