ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

பக்கத்தான் வசமுள்ள மாநிலங்களில் சட்டமன்றம் கலைக்கப்படாது- தலைவர் மன்றம் அறிவிப்பு

ஷா ஆலம், அக் 6- ஆண்டு இறுதியில் வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) கூட்டணியின் கீழுள்ள மூன்று மாநிலங்களும் தங்கள் சட்டமன்றங்களைக் கலைக்கத் தயாராக இல்லை.

நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்  என்ற வதந்திகள் பரவி வரும் நிலையில் இந்த வருட இறுதிக்குள் தேர்தல் நடத்துவதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகளை கருத்தில் கொண்டு  நடைபெற்ற ஒன்றிணைந்த தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கம் வரை லா நினா மற்றும் வடகிழக்கு பருவமழையின் நிகழ்வு காரணமாக அளவு மழை பெய்யும் என்றும் பெரும்பாலான மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வுத் துறையின் அறிக்கையை தலைவர் மன்றம் கவனத்தில் கொண்டுள்ளது என்று கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மந்திரி புசார்கள் மற்றும் பினாங்கு முதலமைச்சர்mஆகியோரின் நிலைப்பாட்டை தலைவர் மன்றம் ஏற்றுக்கொள்கிறது. அந்த மாநிலங்களின் சட்டமன்றங்கள் 2023 ஆம் ஆண்டு பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் கலைக்கப்படும் அது மேலும் கூறியது.

கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் மற்றும் அப்கோ எனப்படும் ஐக்கிய முற்போக்கு கினாபாலு கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ மாடியஸ் டாங்காவ் ஆகியோர் இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகியவை மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையின்படி வெள்ளக் காலத்தை எதிர்கொள்ள தங்கள் தயார்நிலையை மேம்படுத்தியுள்ளன என்றும் ஹராப்பான் விளக்கியது.


Pengarang :