ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய செயல் திட்டங்களை முன்னெடுப்பீர்- மந்திரி புசார் வலியுறுத்து

கிள்ளான், அக் 24- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் பொதுக்கள் வாக்களிப்பதை உறுதி செய்வதற்கான செயல் திட்டங்களை பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் இயந்திரம் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் ஜனநாயக க் கடமையை ஆற்றுவதை உறுதி செய்வதுதான் கட்சியின் வெற்றிக்கான திறவுகோலாகும் என்று சிலாங்கூர்  மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பல மாநில இடைத்தேர்தல்களில் நாம் தோல்வி கண்ட போதிலும் வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், நம் முன் பல சவால்கள் உள்ளன. நமது தேர்தல் இயந்திரத்தின் பலம் மிகவும் முக்கியமானதாகும். ஆகவே, தேர்தலில் மக்களை வாக்களிக்கச் செய்வதற்கான உந்து சக்தியாக நமது தேர்தல் இயந்திரம் விளங்குகிறது என அவர் சொன்னார்.

தாமான் செந்தோசா சமூக மண்டபத்தில் காப்பார், கிள்ளான் மற்றும் கோத்தா ராஜா தொகுதிகளுக்கான ஹராப்பான் தேர்தல் இயந்திர தொடக்க நிகழ்வு மற்றும் வாக்களிப்பு இடம் மற்றும் வாக்கு எண்ணும் ஏஜெண்டுகளுக்கான விளக்கமளிப்பிற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டப் பின்னர் வேட்பாளர் நியமனம் தொடர்பில் விவாதிப்பதோ, சர்ச்சையை ஏற்படுத்துவதோ கூடாது என்றும் அவர் தேர்தல் பணியாளர்களுக்கு அவர் நினைவுறுத்தினார்.

வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் தகுதியுள்ள வேட்பாளர்களை முன்மொழிவது தொடர்பில் மாநில நிலையிலும் தொகுதி நிலையிலும் நீண்ட கால அவகாசம் வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாம் முடிவெடுக்காமல் சதா விவாதம் செய்து கொண்டே இருந்தால் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் தருணத்தை தவறவிட்டு விடுவோம். அதன் பிறகு எந்த பயனும் இல்லை. ஆகவே, நாம் தொடர்ந்து முன்னோக்கி  சென்று கொண்டே இருக்க வேண்டும் என்றார் அவர்.


Pengarang :