ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஐ.சீட் விண்ணப்பங்களுக்கு குறுகிய காலத்தில் அங்கீகாரம்- வணிகர்கள் பெருமிதம்

கிள்ளான், அக் 24- சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) மூலம் கிடைக்கும் உதவி வெள்ளத்திற்குப் பின் வர்த்தகத்தைத் தொடர்வதற்கான உயிர்நாடியாக விளங்குவதாக இதிட்டத்தில் உதவிப் பெற்றவர்கள் கூறினர்.

கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கிள்ளான் உத்தாமாவில் உள்ள தனது கடையிலிருந்த அனைத்து வர்த்தக உபகரணங்கள் சேதமுற்ற நிலையில் அந்த இழப்பிலிருந்து மீள்வதில் மாநில அரசின் இந்த உதவி பெரிதும் துணை புரிந்ததாக ஆயுர்வேத நிலையத்தை நடத்தி வரும் கே. தனலட்சுமி (வயது 57) கூறினார்.

எனக்கு துவாலைகளை உலர  வைக்கும் சாதனம், கூந்தல் கழுவும் கருவி மற்றும் முக ஒப்பனை சாதனங்கள் வழங்கப்பட்டன. எனது வர்த்தகத்தை தொடர்வதற்கு இந்த சாதனங்கள் மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள சுல்தான் சுலைமான் அரங்கில் நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் உதவித் திட்ட அறிமுக நிகழ்வில் ஐ-சீட் உதவியைப் பெற்றுக் கொண்டப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஐ-சீட் விண்ணப்பத்திற்கு மிகவும் குறுகிய காலத்தில் அங்கீகாரம் கிடைத்ததானது வணிகர்கள் உதவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை மாநில அரசு உண்மையாகவே கொண்டிருப்பதை புலப்படுத்துவதாக உள்ளது என்று வாகனம் மூலம் உணவு விற்பனையில் ஈடுபட்டு வரும் எம்.நாகேந்திரன் (வயது 42) கூறினார்.

தேவையான ஆவணங்களையும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளையும் பூரத்தி செய்யும் பட்சத்தில் விரைவாக விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப் படுகின்றன. எனது விண்ணப்பம் ஒரே நாளில் அங்கீகரிக்கப்பட்டு குளிர் பதனப் பெட்டி மற்றும் மைக்ரோ அவன் ஆகிய சாதனங்கள் வழங்கப் பட்டன என்று ஷா ஆலம்  செக்சன் 25ஐச் சேர்ந்த அவர் குறிப்பிட்டார்.


Pengarang :