ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

ஹிஜ்ரா கடனுதவித் திட்டத்தின் வழி  62,000 தொழில்முனைவோர் பயன் பெற்றனர்

கிள்ளான், அக் 25- யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் வர்த்தக கடனுதவித் திட்டத்தின் வழி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 62,000 தொழில் முனைவோர் பயனடைந்துள்ளர். 

மொத்தம் 63  கோடியே 20 லட்சம் வெள்ளி சுழல் நிதியை இந்த கடனுதவித் திட்டம் உள்ளடக்கியிருந்ததாக  முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இம்மாநிலத்திலுள்ள சிறு வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு இந்த கடனுதவித் திட்டம் பெரிதும் துணை புரிந்துள்ளதை இது காட்டுவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஹிஜ்ரா கடனுதவித் திட்டத்தை நாம் தொடங்கிய போது சூழல் நிதியின் மதிப்பு வெறும் 7 கோடி வெள்ளியாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது அந்த நிதி 63.2 கோடி வெள்ளியை எட்டியுள்ளது. இதன் மூலம் சிறு வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை நடத்துவதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும்  வாய்ப்பு கிட்டியுள்ளது என அவர் சொன்னார்.

ஒரு லட்சம் வெள்ளி வரை கடனுதவி பெறுவதற்கான வாய்ப்பினை வழங்கும் மாநில அரசின் இந்த வர்த்தக கடனுதவித் திட்டத்தின் வழி சிறு தொழில்முனைவோர் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கும் மூலதனத்தை பெருக்குவதற்கும் உரிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

இன்று இங்குள்ள ஜி.எம். கிள்ளான் பேரங்காடியில் கம்யூனிட்டி பிஸ்னஸ் செயலியை தொடக்கி  வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :